தேவதை கதைகள் # 5 – கிறுக்கன்

முதல் நாள் பார்த்த போது

எதுவுமே தோன்றவில்லை…

என் கடைக் கண் பார்வை கூட

உன் மீது படவில்லை…

 

காலங்கள் கடந்து போக

எங்கெங்கோ சுற்றி விட்டு

உன்னை பார்த்த மறுமுறையும்

எதுவுமே பேசவில்லை..

 

இப்போது மட்டும் கரைந்துவிட்ட

என் பாழாய்ப்போன மனம்

உன்னை சுற்றியே போகிறது…

கற்கள் எறிந்த நீர் பரப்பில்

வட்ட வட்ட அலைகள் போல்…

 

காதல் ஒன்றும் தூரம் இல்லை…

காத்திருக்க நேரம் இல்லை…

 

இனி நீ பேசும் வார்த்தைகளில்

புதைந்து போக..

உன் சின்ன கண்களில்

சிதைந்து போக..

நான் ஒன்றும் கிறுக்கன் இல்லை…

 

எப்பொதும் என் இதயம்

உன்னையே தேடி கொண்டிருப்பதால்

கடைசியில் கிறுக்கிய வார்தைகளில்

எதிலுமே உண்மை இல்லை…

தேவதை கதைகள் # 4 – மாயம்

உனக்காக காத்திருக்கும்

சில நிமிட நேரங்கள்

நீண்டு விட்ட வானத்தின்

மேகக் கூட்டம் போல்

மெதுவாகவே போகிறது…

 

நீ அருகில் இருக்கும் நேரம் வரை

சில மணி நேரங்கள்

சில்லறை காசுகள் போல்

சிதறி போகிறது…

 

தேவதைகளுக்கு மட்டும் தான் தெரியும்

நீளும் காலங்களை சுருக்கி விடும்

மாயமும்… மந்திரமும்…

 

ஆனால்..

நீ செய்யும் மாயம் மட்டும்

என் உயிரையும் ஒரு புள்ளிக்குள்

சுருக்கி விட்டு போகிறது…

தேவதை கதைகள் # 3 – புதிர்

ஏதேதோ பேசிவிட்டு

புதிர்போல் விரியும் கேள்விகளுக்கு…

நீ சொல்லும்

“ஒன்றும் இல்லை…” என்ற விடைகளுக்குள்

ஒன்றாமல் ஒளிந்திருக்கிறது

இன்னும் ஆயிரம் புதிர்கள்…

 

அந்த விடையின் அர்த்தம் காண

அகராதி தேடி பார்த்தால்…

கடைசி பக்க காகிதம் வரை

அதற்கான பதில்

“ஒன்று கூட இல்லை…”

தேவதை கதைகள் # 2 – வேண்டா காதல்

காயங்கள் செய்து போகும்

காதலே வேண்டாம் என்று

முடிவோடு முயற்சித்த போதும்…

என் நெஞ்சுக்குள் ஊடுருவி

என்ன தான் செய்தாயோ…

எத்தனை முறை பார்த்தாலும்

அத்தனை முறையும் காதல்கொள்கிறேன்…

தேவதை கதைகள் # 1 – நிலைமாற்றம்

சிரித்து சிரித்து பேசி விட்டு

உன்னை முறைத்து பார்க்கும்

ரசிகன் ஆகிறேன்…

காதோரம் ஒலிக்கும்

உன் வார்த்தை அசைவுகளில்

இசையமைக்கும் கலைஞன் ஆகிறேன்…

அடி பெண்ணே…

என்ன நான் செய்வேன்..!?!

உனக்காக நான் எழுதும்

எழுத்துகளில் கூட

கொஞ்சம் கவிஞன் ஆகி தொலைகிறேன்…

நண்பன்

நாம் நடந்து வந்த பாதையில் முட்கள் இருந்தும்
என் பாதம் பட்டதில்லை…
நீ, என் முன் நடந்து சென்றதால்…

இன்று பூவனத்தில் நடந்து சென்றாலும்,
பாலைவனமாய் தெரிகிறது..
நீ, வேறு வழி மாறி போனதால்…

வானத்தின் நீளமும் அகலமும்
நம் பறவை சிறகுகளில்
அளந்திருக்கிறோம்…

இன்பமும் துன்பமும்
இதயத்தின் வலியும்
ஒன்றாகவே உணர்ந்திருக்கிறோம்…

காதலும் களிப்பும்
கதை சொல்லிக் கேட்டு
திரைக்கதை தொடர்புகளில்
மனம் தொலைத்திருக்கிறோம்…

நிமிடங்கள் நாட்களாகி,
நாட்கள் வருடங்கள் ஆனாலும்
நீ பிரிந்து சென்ற
என் வாழ்ககை மட்டும்
உன்னை விட்டு பிரிவது இல்லை…
சேரா பிரிவுகளின் தொலைவுகள்
இதைவிட தூரம் இல்லை…

உன்னைப் போல் ஒரு நண்பன் இருந்தால்
உலகில் உள்ள துன்பங்கள் யாவும்
சுவடில்லாமல் தொலைந்துப் போகும்…
என் கண்ணீர்க் கூட உன்னை பார்த்ததும்
கண்களுக்குள்ளேயே கரைந்துப் போகும்…

இப்படிக்கு,
ஒரு நண்பன்

என் காதலே….!!!

முன்ஜென்மக் காதல் ஒன்று
முன்னிரவு தோன்றிவிட…
நீ செய்த காயத்திலே
என் நெஞ்சம் கனக்குதடி…

காயங்களின் வலி போக்க
மாயங்கள் ஏதும் இல்லை…
நீயில்லா என் வாழ்க்கை
சாயங்கள் போனதடி….

இதயத்தின் மையம் தேடி
வந்திறங்கிய வாளோன்றால்…
என் அகிலத்தின் அத்தனையும்
மொத்தமாய் உடைந்ததடி…

உடைந்துப் போன மனதைக் கூட
ஒட்ட வைக்க வழிகள் உண்டு….
நீ கடந்துப் போன பிறகு
அது தூள் தூளாய் ஆனதடி…

தூசிப் பட்ட விழிகள் என்று
என் கண்ணீரை மறைத்துவிட்டேன்…
பாசி படர்ந்த என் மனதின் ஓரம்
உன் நினைவுகள் வழுக்குதடி…

நாம் வாழ்ந்த காலங்கள் யாவும்
என் மூளைக்குள் முடங்கிவிட…
உன்னோடு வாழ்ந்துவிட
என் உயிர் கொஞ்சம் அலையுதடி…

உன்னைப் போல் காதலிக்க
இவ்வுலகில் யாரும் இல்லை…
வேறுலகம் சென்று விட்டால்
அவ்வுலகம் துரத்துதடி…

நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம்
காற்றோடு கரைந்ததடி…
என் கனவின் முதல் காட்சிக் கூட
உன்னில் இருந்தே தொடங்குதடி…

அவனும் இவனும்

முதல் எழுத்து முதல்
முற்றுப்புள்ளி வரை
மூலக்கதைச் சொல்லி,
முதலும் முடிவும்
அவன் தான் என்பான்…

முடிவிலி தொடரின்
உருவம் கேட்டால்,
இவன் தான் அவனின்
உருவகம் என்பான்…

இவன் தேடும்
பொருள் அனைத்தும்
தனதென்று சொல்வான்…
எங்கும் எதிலும்
பரம்பொருள் என்பான்…

பிறர் செய்யும் தவறுகள்
சதி என்பான்…
இவன் செய்யும் தவறுகள்
விதி என்பான்…

படைத்தலும்,
காத்தலும்,
அழித்தலும்,
அண்டமும்,
அகிலமும்,
அவன் தொழில், என்பான்…

இவன் வாழ,
பலர் வாட,
பணம் தேடி
கரை சேர்வது
இவன், தொழில் என்பான்…

தொழில் செய்து
பலன் தேட
அவன் மனிதன் இல்லை…

இவன் செய்யும்
தீவினைகள் தடுக்க
ஒரு கடவுள் கூட இல்லை…

என்ன வாழ்க்கடா இது…??

அடுத்த நிமிடத்திற்கான
நீண்ட பயணத்தின் நடுவில்
வெறுமையாய் ஒரு வாழ்க்கை…

இன்னொரு நாளின்
விடியலைத் தேடி
தொலைந்துப் போனது தூக்கம்…

கடந்தக் காலங்கள்
கனவுகளாகிப் போய்
நினைவுகள் தரும் வலிகள்…

சரியோ தவறோ
தரம்ப் பிரிக்க முடியாமல்
தள்ளாடும் மனம்…

பதில்களின் இறுதியில்
கேள்விகள் தொடங்கி
முடிவுப்பெறாமல் நீட்சிப்பெரும் சுழல்…

உதடுகள் நடுவில்
பொருளினைத் தேடி
புகைக்குள் அடங்கும் குழப்பம்…

பொய்யாகிப் போன மெய்களும்
மெய்யாகிப் போன பொய்களும்
இணைந்துக் கொண்ட ஏமாற்றம்…

மனநிலை சற்று
ஒருநிலைக் கொள்ள
பலநிலைக் கொண்டும்
பலனேதும் இல்லை…

இதயத்தின் .மறுப்பக்கம்
கருப்பாகி போனால்,
உடலினில் உறைந்திடும்
உயிர் கூடத் தொல்லை…

உன் காதல்

நிழற்படம் நிறைந்திடும்
உருவங்கள் போல
உன் மனமெங்கும் நிறைந்திட்டேன் என்றாய்…
என் உயிரின் வரைபடம்
நீ திருடி சென்றாய்…

அடிக்கடி நினைத்திடும்
கனவுகள் போல் வந்தாய்..
காதல் என்றால் என்னவென்று
நீ சொல்லி தந்தாய்…

ஊடலுகொரு இலக்கணம்
நீ வகுத்து தந்தாய்…
எக்கணமும் விலகாத
நினைவுகள் தந்து போனாய்…

உலகெங்கும் சுற்றி பார்க்க
நான் வேண்டும் என்றாய்…
உன் உலகெல்லாம் நான் தானென்று
உடைந்துப் போய் அழுதாய்…

பக்கத்துக்கு இருக்கையில்
பூசெடியாய் படர்திருந்தாய்…
என் தோள் இருக்கும் தைரியத்தில்
என் பக்கம் சாய்ந்துக் கொண்டாய்…

நம் உதடுகள்
அருகினில் பேசிக்கொள்கையில்,
உயிரினை பரிமாறினாய்…
நேர பரிமாணம்
உறைந்து போகையில்,
காதலில் பரிணமித்தாய்..

இவை அனைத்தும் பொய் என்று சொல்லி
நம் காதல் கொன்றாய்..
பிரிந்து சென்று மறந்துப் போய்,
என் உயிரை கொன்றாய்…