புத்தாண்டு 2018

பருப்பொருள் சுட்டெரிக்கும் ஆற்றல் மண்டலத்தின்..
ஈர்ப்பு விசையில் சுற்றி திரியும்
உயிர் கோளின் இன்னொரு விடியல்!

விதைக் கொண்ட மரம் துளிர்க்க
மண்மூடி காத்திருக்கும்
விருட்சத்தின் இன்னொரு விடியல்!

பூமி பந்தின் உயிர்மை உயர,
மானுடர்த்தம் கடமை உணரக்காத்திருக்கும்
பகுத்தறிவின் இன்னொரு விடியல்!

இது..
முன்னேற்றம் தேடி
நன்னம்பிக்கை கொண்ட
கோடிக் கனவுகளின் இன்னொரு விடியல்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Advertisements

பரம்பொருள்

முக்காலத்தின் முன் தோன்றி
ஒருமையின் பரிமாணமாய்
படைத்தலிலும் அழித்தலிலும்
உணர்வுடைய உயிரினிலும்…
நீரிலும் நெருப்பிலும்
விண்மண் துகள் அணுவினிலும்…
பல கோடி அண்டகளிலும்
அகிலத்தின் அனைத்தினிலும்…

அலை போல் திரண்டு
துகளாய் திரிந்து
நிலைப் பெற்ரொளிறும்
திறன் நிறை ஆற்றலே..

நீக்கமற நிறைந்திருக்கும்
பருப்பொருளே!
மானிடர்தம் கண் காண
கருப்பொருளே!

பெரும் காலவெளியின் துகள்
எனக்கு நீயே தான்
என்றும் பரம்பொருளே!!

தேவதை கதைகள் # 6 – தேடல்

இணையத்தில் இணைந்து கொண்டு
சுற்றி சுற்றி உன்னை தேடி
சற்று நேரம் பேசிவிட்டு
நீ விடை பெற்று பிரியும் 
ஒவ்வொரு முறையும்
உன்னையே தேடி போகிறது
மனம் தொலைத்த 
என் இதயம்…

ஒவ்வொரு முறையும் 
என் அலைபேசி சிணுங்கும் போதும்..
சட்டென்று எட்டி பார்த்து
ஏமாந்து போகிறேன்..
உன் பெயர் தாங்காத
அழைப்புகளை கண்டதும்…

உன்னை பற்றி இனிமேலும்
நினைக்காமல் இருந்து விட
இறுதியாக முடிவெடுத்து
புத்தகத்தின் பக்கங்களில் 
என் கவனம் புதைத்தேன்…
அதில் சிதறி கிடக்கும் எழுத்துக்களிலும்
உன் பெயர் தேடும் என் கண்களை
என்னவென்று சொல்ல…?!

பெண்ணியம்

நிழல்களிலும்

நிர்வாணம் தேடியலையும்

அமானுட பார்வைகளில்

பதியாமல் விலகி செல்ல

உடைகளில் கண்ணியம் வேண்டும் என்றார்கள்…

 

பிஞ்சுகளை தீண்டிப்பார்க்கும்

நஞ்சடைந்த மனதின் முன்

கண்ணியம் காக்க

பெண்ணியம் தான் என்ன செய்யும்?!!

 

அச்சம்.. மடம்.. நாணம்.. என்றபடி

அவளுக்கான விதிமுறைகள்..

 

விதிகளின் வீரியத்தில்

விலகிப் போன ஆசைகள்..

சுருங்கிப் போன கனவுகள்..

 

விதிகளை தகர்த்துவிட்டு

எதிர்த்து நின்றதால்

பெண்மை இலக்கணத்தில்

பிழை என்றானாள்..

 

கற்பு எனும் கோட்டைக்குள்

கண்ணகிகளை நிறுத்தி விட்டு

பெண்ணியத்தை பிடுங்கித் தின்கிறது ஆணினம்..

 

ஆண்மையின் அதிர்வுகளில்

அடங்காமல் உயிர்த்துக் கொண்டு

சமநிலை பெற துடிக்கிறது பெண்ணியம்..

இதுவும் கடந்து போகும்!!!

துயரங்களை துடைத்தெரிய
காத்திருக்க வேண்டி நின்றால்
வீணாக போய்விடும்
பொன்னான நேரங்கள்…

சுமைகளை ஒன்றுசேர்த்து
சோகங்களோடு பூட்டி விட்டால்
அடியாழத்தில் அமிழ்ந்து போகும்
பாரங்கள் அத்தனையும்…

தூரங்கள் என்றுகொண்டு
பயணங்கள் நின்று போனால்
வாழ்க்கையதன் மறுமுனைக்கு
வேறு வழியின்றி திசை மாறும்…

தோல்விகள் எல்லாம் – சிறு
வேள்விகள் என்று கொண்டால்
நெஞ்சுடைய வலி கூட
சிறு பஞ்சாக மாறி போகும்…

திடமான மனதோடு
காலங்களை கடந்து விட்டால்
மரணத்தின் விளிம்பில் கூட
மாற்றங்கள் செய்திடலாம்…

நடப்பவைகளின் நியாயம் தேடி
புதிர்களுக்குள் புதைந்து போனால்
விடை தேடி அலையும் மனதில்
என்றுமே அமைதி இல்லை…

வாழ்கையின் திசை மாற்றம்
நன்மைகே என நினைத்து விட்டால்
எல்லா கேள்விகளுக்கும்
விடை ஒன்று தேவை இல்லை…

தேவதை கதைகள் # 5 – கிறுக்கன்

முதல் நாள் பார்த்த போது

எதுவுமே தோன்றவில்லை…

என் கடைக் கண் பார்வை கூட

உன் மீது படவில்லை…

 

காலங்கள் கடந்து போக

எங்கெங்கோ சுற்றி விட்டு

உன்னை பார்த்த மறுமுறையும்

எதுவுமே பேசவில்லை..

 

இப்போது மட்டும் கரைந்துவிட்ட

என் பாழாய்ப்போன மனம்

உன்னை சுற்றியே போகிறது…

கற்கள் எறிந்த நீர் பரப்பில்

வட்ட வட்ட அலைகள் போல்…

 

காதல் ஒன்றும் தூரம் இல்லை…

காத்திருக்க நேரம் இல்லை…

 

இனி நீ பேசும் வார்த்தைகளில்

புதைந்து போக..

உன் சின்ன கண்களில்

சிதைந்து போக..

நான் ஒன்றும் கிறுக்கன் இல்லை…

 

எப்பொதும் என் இதயம்

உன்னையே தேடி கொண்டிருப்பதால்

கடைசியில் கிறுக்கிய வார்தைகளில்

எதிலுமே உண்மை இல்லை…

தேவதை கதைகள் # 4 – மாயம்

உனக்காக காத்திருக்கும்

சில நிமிட நேரங்கள்

நீண்டு விட்ட வானத்தின்

மேகக் கூட்டம் போல்

மெதுவாகவே போகிறது…

 

நீ அருகில் இருக்கும் நேரம் வரை

சில மணி நேரங்கள்

சில்லறை காசுகள் போல்

சிதறி போகிறது…

 

தேவதைகளுக்கு மட்டும் தான் தெரியும்

நீளும் காலங்களை சுருக்கி விடும்

மாயமும்… மந்திரமும்…

 

ஆனால்..

நீ செய்யும் மாயம் மட்டும்

என் உயிரையும் ஒரு புள்ளிக்குள்

சுருக்கி விட்டு போகிறது…

தேவதை கதைகள் # 3 – புதிர்

ஏதேதோ பேசிவிட்டு

புதிர்போல் விரியும் கேள்விகளுக்கு…

நீ சொல்லும்

“ஒன்றும் இல்லை…” என்ற விடைகளுக்குள்

ஒன்றாமல் ஒளிந்திருக்கிறது

இன்னும் ஆயிரம் புதிர்கள்…

 

அந்த விடையின் அர்த்தம் காண

அகராதி தேடி பார்த்தால்…

கடைசி பக்க காகிதம் வரை

அதற்கான பதில்

“ஒன்று கூட இல்லை…”

தேவதை கதைகள் # 2 – வேண்டா காதல்

காயங்கள் செய்து போகும்

காதலே வேண்டாம் என்று

முடிவோடு முயற்சித்த போதும்…

என் நெஞ்சுக்குள் ஊடுருவி

என்ன தான் செய்தாயோ…

எத்தனை முறை பார்த்தாலும்

அத்தனை முறையும் காதல்கொள்கிறேன்…

தேவதை கதைகள் # 1 – நிலைமாற்றம்

சிரித்து சிரித்து பேசி விட்டு

உன்னை முறைத்து பார்க்கும்

ரசிகன் ஆகிறேன்…

காதோரம் ஒலிக்கும்

உன் வார்த்தை அசைவுகளில்

இசையமைக்கும் கலைஞன் ஆகிறேன்…

அடி பெண்ணே…

என்ன நான் செய்வேன்..!?!

உனக்காக நான் எழுதும்

எழுத்துகளில் கூட

கொஞ்சம் கவிஞன் ஆகி தொலைகிறேன்…