Book Review: சிவகாமியின் சபதம்

Sivagamiyin Sabadham (Tamil)Sivagamiyin Sabadham by Kalki

My rating: 4 of 5 stars

கல்கி எழுதிய இக்கதையானது மகேந்திர பல்லவர் மற்றும் அவருடைய மகனாகிய மாமல்லர் நரசிம்மவர்ம பல்லவர் ஆகிய பல்லவ மன்னவர்களின் கால வரலாற்றை தழுவி எழுதப் பட்டிருகிறது.

கதையின் நாயகியான சிவகாமி நடன கலையில் நாடெங்கும் புகழ் பெற்று விளங்குகிறாள். சிவகாமி, ஆயனர் என்கிற சிற்பியின் மகள். மாமல்லரும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் உயிருக்கு நிகராக காதலிக்கிறார்கள். இந்நேரத்தில் வாதாபியின் அரசர் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்து வருகிறார். அவரை காஞ்சி எப்படி எதிர் கொள்கிறது? அதன் பின் விளைவுகள் என்ன? புத்த பிக்ஷுவாக தோன்றும் நாக நந்திக்கும் இந்த இரு நகரங்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? வென்றது காஞ்சியா? வாதாபியா? மகேந்திர பல்லவர் இவர்களின் காதலை எப்படி எதிர்கொள்கிறார்? இவை அனைத்தையும் தாண்டி இவர்களின் காதல் வெற்றி பெருமா? என்ற கேள்விகளுக்கு விடையாக வரலாற்று பின்னணியின் கதை நகர்கிறது.

கல்கியின் அபாரமான வர்ணனைகள் நம்மை அந்த கால கட்டத்திற்கே அழைத்து சென்று விடுகிறது. பண்டைய காஞ்சி நகரின் வீதிகளில், போற்படைகளின் நடுவில், கோட்டையில், அரண்மனையில் என்றபடி நாமே நின்று பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறார். ஒவ்வொரு கதை மாந்தரும் தனக்கான இயில்பில் இருந்து மாறாமல் பயணிப்பது இதில் கவனிக்க தக்க விஷயம். ஒரு கதாபாத்திரம் எழுதப் படும் போது அவருக்காக வரையறுக்கப்பட்ட குணாதிசயங்களுகுள்ளேயே அந்த கதாப்பாத்திரம் பயணப் பட வேண்டும். ஒரு கதையில் இது மிக முக்கியம். ஆசிரியர் கல்கி அவர்கள் அதை சிறப்பாகவே செய்திருந்தார்.

மாமல்லர் தன் காதலுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் புரியாமல் கோபம் கொள்ளும் சிவகாமியின் நியாயங்கள் ஏற்புடையதாக இல்லை. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும் மகனாக, உயிர் காதலனாக, தோள் கொடுக்கும் நண்பனாக என்று அவருடைய பாத்திரம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

சிவகாமி நடன கலையில் தலை சிறந்தவராக சித்தரிக்க பட்டிருந்தாலும், சில இடங்களில் சிறு பிள்ளை தனமாக நடந்து கொண்டிருப்பதாக பட்டது. இவரின் சில முடிவுகளால் கதையின் போக்கில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்வதும் ராஜ்யங்கள் மோதிக் கொள்வதும் சற்று மிகை என்றே தோன்றியது. உண்மையில் அது போல் ஒரு பெண் இருந்ததாக தெரியவில்லை ஆனால், சிவகாமியையும் அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் கதை மாந்தர்களையும் நீக்கி விட்டு பார்த்தால் கதையில் மிஞ்சி நிற்பது வரலாறு மட்டுமே என நினைகிறேன்.

தலைசிறந்த சிற்பியான ஆயனர் என்னதான் கலை தாகம் என்றாலும் எந்நேரமும் சிற்பங்களையும் சித்திரங்களையும் மட்டுமே யோசித்துக் கொண்டு அசட்டுத்தானமாக முடிவெடுப்பதும் ஏற்புடையதாக இல்லை.

மகேந்திர பல்லவரின் சமயோசிதமான முடிவுகள் ஆச்சர்யம் அளித்தது. எதிரிகளை பற்றி தகவல் சேகரிப்பதில் இருந்து, திரிப்பது, திசை திருப்புவது என்றபடி மகேந்திரரும் அவருடைய ஒற்றர்களும் சேர்ந்து அசத்தி இருப்பார்கள். ஒற்றர்களின் பங்களிப்புகள் அதிகம் கவர்ந்தன.

கதையில் வரும் யுத்த பகுதிகளில் சற்று அதிகமாக கவனம் செலுத்தி இருக்கலாம். நிறைய இடங்களில் யுத்தம் வரப் போகிறது.. வரப் போகிறது என்று அதன் பிரமாண்டமான முன்னேற்பாடுகளையும் அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகளையும் பல பக்கங்களுக்கு சொல்லி விட்டு, யுத்தம் என்று வரும் போது சட்டென்று கதை ஓரிரு வரிகளில் கடந்து விடும். ஒருவேளை வன்முறைகளை பற்றி பேச வேண்டாம் என்று விட்டு விட்டாரோ.. என்னவோ!! எப்படியும் ராஜ்யங்களை விட பாதிக்க படுவது கடைசியில் மக்கள் மட்டுமே.

முதலில் இந்த புத்தகத்தின் சில பக்கங்களில் வர்ணனைகளால் நிரம்பி இருப்பதைக் கண்டு சலித்து போனேன். பின் சற்று நாட்களுக்கு பிறகு மறுபடியும் துவங்கிய போது ஆங்காங்கே சில நிகழ்வுகளை தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது. கதையில் இருக்கும் முடிச்சுகள் வேறு எங்கோ வந்து அவிழ்வது தான் சுவாரசியம்.

1940களில் இது போன்றதொரு பிரம்மாண்ட சிந்தனைகளுடன் ஓர் தமிழ் நாவல் என்பது போற்றுதற்குரியது. அதன் நீள அகலங்கள் நம்மை வேறு உலகிற்கு கொண்டு செல்கின்றன. கதை மாந்தரின் குணாதிசயங்கள்.. நீளமான வசனங்கள்.. வர்ணனைகள்… நிகழ்வுகள்.. என்று ஒரு பழைய படம் பார்த்து முடித்தது போன்ற ஓர் உணர்வு.

View all my reviews

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s