(பெரிய) ஆசைகள்

அரை இருட்டு நேர,
அதிகாலை பொழுதுகளில்,
அதிகம் பேசாமல்,
அப்படியே மௌனித்துகொண்டு,
நாம்
கண்களால்,
கதை பேச வேண்டும்…

நேரக்கரைசல்களால்
நாட்களை நகர்த்திக்கொண்டு போய்,
நாம் பேச்சுக்களில் மூழ்கியிருக்க…
நீ, உன் நேர விலகலால்
என்னை நீங்கிப்போகையில்,
உன் முகம் திரும்பிய
தூரத்துப் பார்வைகளில்
நான் தொலைந்து போக வேண்டும்…

பிடிக்காத பிரிவுகளில்
இருந்துக்கொண்டு…
பிடித்துபோன உன் பெயரை,
என் அறை சுவர் முழுவதும்
எழுதி வைத்து,
விழிதெழும் போதெல்லாம்,
அதில் என் கண் தொலைக்க வேண்டும்…

பூந்தோட்ட இருக்கைகளில்
உன் வரவுக்காக காத்திருக்கையில்,
தீண்டியது தென்றலோ, நீயோ…
என முழித்துக்கொண்டிருக்கையில்…
எதிரே வந்தமரும்
உன் சின்ன இதழ்களின் சிரிப்பில்
நான் சிதைந்து போகும் போதே…
என்னை செல்லமாய்
அடித்து விட்டு சென்றதில்,
உன் கைகளுக்குள்ளேயே
ரேகையாகி இருக்க வேண்டும்…

என்னிடம் பேசிக்கொண்டிருந்த உன்னுடைய பொழுதுகளை
நீ நினைத்துக்கொண்டிருக்கையில்…
உன்னிடம் ‘நான் காதலிக்கிறேன்’ என்றதும்,
உதடுகள் திறந்து நீ உதிர்த்திடும் புன்னகையில்,
என் உயிர் தொலைந்து போக வேண்டும்…

உன்னை பார்க்கும் போதெல்லாம்
இமைகளின் நடுவில் மாட்டிக்கொண்டு
‘என்னை இம்சித்துக் கொண்டே, நீ வந்தமரும் கண்களை’
உன்னிடம் சொல்லி முடிக்கையில்,
நானும் உன்னை இம்சிக்கிறேன் என்று
நீ சொல்லி சிரிக்கையில்,
ஆயிரம் முறை உன் கண்களுக்குள்ளேயே,
நான் காணாமல் போக வேண்டும்…

உன் வீட்டு தெருவில்
நான் நடந்து போகையில்…
வாசற்படியில் நின்றுக்கொண்டே
வழி மறிக்கும் உன் விழிகளை
பார்த்துக்கொண்டே,
என் வீட்டு பாதையின்
வழி மறந்து போக வேண்டும்…

தினமும் நூறு முறையாவது
நம் காதலை சொல்லி கொண்டிருக்கையில்,
சீக்கிரமாக முடிவு பெரும் நாட்களை,
சலித்துக்கொண்டே கடந்துப்போகையில்…
பிரியும் நேரம் பிரியா மனதில்,
உன்னை நினைத்துக்கொண்டிருக்கும் போதே,
நீ தரும் முத்தத்தில்,
என் நாட்களெல்லாம்,
இப்படியே ஓடி போக வேண்டும்…

Advertisements