தூரத்தில் இருந்து என் காதல்

இருள் படர்ந்து

வெளிச்சம் விரட்டிய சாலைகள் …

ஆங்காங்கே இரவோடு போராடி

தோற்றுப்போன தெரு விளக்குகள் …

 

எப்போதாவது தோன்றி மறையும்

மனிதர்களும்

அவர்களது நிழலும் …

 

தெருவோரம் வெளிச்சம் தவறிய இடத்தில்

பேசிக்கொண்டிருக்கிறோம்

நீயும் நானும் …

 

சிரிக்கிறாய்,

சிணுங்குகிறாய்,

கோபப்படுகிறாய்,

செல்லமாய் கொஞ்சுகிறாய்,

அத்தனையும் அழகழகாய் …

ரசிக்கிறேன் ஒவ்வொன்றாய் …

 

ஒவ்வொரு முறையும்

“நீ என்னை காதலிக்கிறேன்”

எனும் போதும்

வானம் வரை எட்டி பார்த்துவிட்டு வருகிறேன் …

 

ஏதேதோ பேசுகிறோம் …

நடந்தது,

நடக்க போவது,

நடந்துக்கொண்டிருப்பது,

அத்தனையும் கனவுகள் போல் …

 

காலம் கரைந்துபோகிறது

உடனடியாய் …

துன்பம் தொலைந்துபோகிறது

உன் சிரிப்பினில் …

 

என் மனம் உன்னிடத்தில் மாட்டிகிடக்கையில்

சற்றே தான் உணர்கிறேன்,

நீ என்னிலிருந்து தூரத்தில் இருப்பதை …

நான் செல்பேசியை அணைக்கும் போதுதான் உணர்கிறேன்

நீ என்னருகில் இல்லை என்பதை …

Advertisements